tamilnadu

img

சென்சஸ் கணக்கெடுப்புடன் மக்கள் கழுத்துக்கு வருகிறது ஒரு சுருக்குக் கயிறு - கே.பாலகிருஷ்ணன்,

கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

தேசிய மக்கள் தொகை பதிவேடு நடைமுறையை தமிழக அரசு உடனே நிறுத்த வேண்டும் ,

சென்னை கோட்டை முன்பு நாளை சிபிஎம் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக தேசமே மாபெரும் போர்க்களமாக மாறி சமர்புரிந்து கொண்டிருக்கிறது. அதை எதிர்கொள்ள முடியாத நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அடக்குமுறையை பல வழிகளில் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. தில்லியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடும் மக்கள் மீது ஒரு பயங்கர வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. 54 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தியாவின் அதிகார மையமாக இருக்கிற தலைநகர் தில்லியிலேயே மிகப் பெரும் பயங்கரம் நடக்கிறது என்றால் நாட்டின் பிறபகுதி மக்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது என்ற கேள்வி எழுகிறது. வடகிழக்கு தில்லியின் பல பகுதிகளில் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் குறிவைத்து இந்துத்துவா மதவெறிக் கும்பல்களால், தில்லி காவல்துறையின் உதவியோடு துப்பாக்கிச் சூடுகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அந்த மக்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டன; வீடுகள், கடைகள், வாகனங்கள் என பெருமளவிற்கு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. தலைநகர் தில்லியிலேயே இப்படிப்பட்ட கொடுமைகள் அரங்கேறியிருப்பதும், பல நூறு கோடி ரூபாய் பெறுமான சொத்துக்கள் அழிக்கப்பட்டிருப்பதும் ஏராளமானோர் உறவினர்களையும், உடைமைகளையும் இழந்து அனாதைகள் போல விடப்பட்டிருப்பதும் போன்ற நிலைமை வேதனையையும் கொதிப்பையும் ஏற்படுத்துகிறது. ஆனால் வன்முறை வெறியாட்டம் நடந்தபோது அதைக் கட்டுப்படுத்துவதற்கோ, அதை தடுத்து நிறுத்துவதற்கோ மத்திய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை தில்லிக்கு வரவழைத்து அவருக்கு அதிகபட்ச பாதுகாப்பிற்காக காவல்துறையினரையும் பாதுகாப்புப் படையினரையும் குவித்துவிட்டு, நாட்டின் கவனம் முழுவதும் அங்கே திருப்பப்பட்டு இருந்த அதே தருணத்தில் வடகிழக்கு தில்லியில் பாஜக தலைவரான கபில்மிஸ்ரா தலைமையில் ஆர்எஸ்எஸ்- பாஜக- பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்துத்துவா மதவெறி அமைப்புகளின் குண்டர்கள், தொழில் முறை ரவுடிகள் என கூலிப்படைகளை இறக்கிவிட்டு கொடிய படுகொலைகளையும், அட்டூழியங்களையும் அரங்கேற்றியிருக்கிறார்கள். 

மவுனம் காத்த பிரதமர்

மூன்று நாட்கள் தொடர்ந்து இந்த வெறியாட்டங்கள் நடந்தபோதிலும், தில்லியிலேயே முகாமிட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பாக வாயே திறக்கவில்லை. 69 மணி நேரம் கழித்துத்தான், பிரதமர் வாய் திறந்தார். அதுவும் கூட, உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்த ஒரு சம்பவம் போலவும், இப்போதுதான் தனக்கு தகவல் கிடைத்தது என்பது போலவும் அவர் மக்களிடம் அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துக் கொண்டார். ஆனால் அதற்குள் வடகிழக்கு தில்லி ஒட்டுமொத்தமாக எரித்து சாம்பலாக்கப்பட்டுவிட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ வெளியிலேயே தலைகாட்டவில்லை. எனவே மத்திய பாஜக அரசாங்கமே இந்த வன்முறை வெறியாட்டத்தை தலைமை தாங்கி நடத்தியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இவ்வளவுக்கு பிறகும், மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவோ அல்லது தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை கைவிடவோ, மத்திய அரசு தயாராக இல்லை. 2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) ஏப்ரல் மாதம் துவங்கவிருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர், சென்சஸ் என்பதையும், என்பிஆர் எனப்படுகிற தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கான கணக்கெடுப்பையும் சேர்த்தே செயல்படுத்துவது என உத்தரவிடப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார். மத்திய அரசு, நாட்டில் என்ன நடந்தாலும் இந்த நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்ற ரீதியிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

வாஜ்பாய் சொன்னது...

வாஜ்பாய் பிரதமராக இருந்த சமயத்தில் ஒருமுறை அமெரிக்காவிற்கு அவர் பயணம் செய்த போது, அங்கு இந்து பிராமணர்கள் மட்டுமே வசிக்கக்கூடிய ஒரு குடியிருப்புக்கு சென்றார். அவர்கள், வாஜ்பாயிடம் சில கேள்விகளை எழுப்பினார்கள். குறிப்பாக, நீங்கள் பிரதமராகி பல மாதங்கள் கடந்துவிட்டன; ஆனால் இன்னும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் திட்டங்கள் எதையும் செயல்படுத்தாமல் இருக்கிறீர்களே என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த வாஜ்பாய், இப்போது நமக்கு நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை; கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில்தான் ஆட்சி இருக்கிறது; எனவே ஆர்எஸ்எஸ் திட்டங்களை கொண்டு செல்ல இயலவில்லை என்று கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. எப்போது அறுதிப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் கிடைக்கிறதோ அப்போது அந்த திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று அவர் கூறியதாகவும் செய்திகள் அன்றைக்கு வெளியாகின. எனவே, நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை கிடைத்துள்ள இந்த ஐந்தாண்டுக்குள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் திட்டங்களையெல்லாம் - நிகழ்ச்சி நிரலையெல்லாம் - எப்படியாவது அமலுக்கு கொண்டு வந்துவிடவேண்டும் என்ற முனைப்பில் மோடி அரசு சென்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதிதான் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் அது தொடர்பான அடுத்தடுத்த நடவடிக்கைகள். 

எதற்கும் காத்திருக்கத் தயாரில்லை 

எனவே அந்த அடிப்படையில், 2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) பணிக்கான 34 கேள்விகளையும் அத்துடன் சேர்த்து நடத்தப்படவுள்ள தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) பணிக்கான 16 கேள்விகளையும் இறுதி செய்து இப்போது அனுப்பியிருக்கிறார்கள். அந்த கேள்விகளுடன் ஏப்ரல் 1 முதல் சென்சஸ் கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை பதிவேடு(என்பிஆர்) விபர சேகரிப்பு நடைபெறவுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கிட்டத்தட்ட 140 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்னும் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்குகளில் தீர்ப்பு எப்படி வரும் என்பதற்கு காத்திருக்கக்கூட மத்திய அரசு தயாராக இல்லை. 

அதுமட்டுமல்ல, குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றினார்களே தவிர அதற்கான விதிகள் எதையும் வரையறை செய்யவில்லை. எந்தவொரு திருத்தச்சட்டமும் நிறைவேற்றப்பட்டபின்னரும் அதை அமல்படுத்துவதற்கு திருத்த விதிகளும் உருவாக்கப்பட வேண்டும். அதை செய்வதற்கு ஒரு காலஅவகாசம் எடுத்துக் கொள்வது என்று கூட இல்லாமல் அவசர அவசரமாக தேசிய மக்கள் தொகை பதிவேட்டையும் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் உருவாக்குகிற பணியை துவக்குகிறார்கள். 

எடப்பாடி அரசின் எகத்தாளம்

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசைப் பொறுத்தவரை, இவர்கள் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கும் இதர பகுதி உழைப்பாளி மக்களுக்கும் மிகப் பெரும் துரோகத்தை செய்தது மட்டுமல்ல; இந்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என்றும், யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா காட்டுங்கள் என்றும் எகத்தாளமாக பேசி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எழுச்சிமிக்க போராட்டங்கள் நடந்து வருகிற பின்னணியில் அதை எதிர்கொள்ள அஞ்சி, மத்திய அரசிடம் இது தொடர்பாக சில கேள்விகளை எழுப்பியிருப்பதாகவும் விளக்கங்கள் கேட்டிருப்பதாகவும் மழுப்பலாக பதில் சொல்லி வருகிறார்கள்.  

முஸ்லிம் மக்களுக்கு நூறு சதவீதம் எங்கள் அரசு அரணாக இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமியும் அவரது அமைச்சர்களும் அவ்வப்போது கூறுகிறார்கள். கடந்த சில மாதங்களில் மட்டும் இந்திய முஸ்லிம்களை குறிவைத்து பாஜக அரசு பல கடுமையான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. குறிப்பாக முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றியது; ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை உடைத்து,அதன் சிறப்பு அந்தஸ்தை பறித்து, 370ஆவது பிரிவை ரத்து செய்து வரலாறு காணாத அரசியல் சட்டப் படுகொலையை அரங்கேற்றியது; அயோத்தி வழக்கில் அநியாயமான தீர்ப்பை மத்திய அரசு அங்கீகரித்துக் கொண்டது;  இப்போது குடியுரிமையையே  கேள்விக்குள்ளாக்கும் கொடிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இவை எல்லாவற்றையுமே ஆதரித்து கைதூக்கிய கட்சிதானே அதிமுக? முஸ்லிம்களுக்கு எதிரான மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பகிரங்கமாக ஆதரித்த அதிமுக அரசு எப்படி முஸ்லிம்களின் அரணாக இருக்க முடியும்?   

இப்போதும்  கூட,  பாஜக கூட்டணியில் உள்ள பீகார் உட்பட 13 மாநிலங்கள், மேற்கண்ட நடவடிக்கைகளை அமலாக்க மாட்டோம் என்று அறிவித்துவிட்டன. தென் மாநிலங்களை பொறுத்தவரை கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, பாண்டிச்சேரி என தமிழகம் தவிர எல்லா மாநிலங்களும் இதை அமலாக்க மாட்டோம் என அறிவித்துவிட்டன. ஆனாலும் தமிழக அதிமுக அரசு இதுவரையிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் அதன் தொடர் நடவடிக்கைகளையும் செயல்படுத்த மாட்டோம் என்று அறிவிக்க தயாராக இல்லை; மாறாக, கேள்வி எழுப்பும் மக்களைப் பார்த்து ஏதேனும் சால்ஜாப்பு சொல்லி சமாளிக்கிற வேலையைத்தான் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. எனவே தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) பணியுடன் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான பணியும் நடைபெறப்போகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் இத்தனை போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிற நிலையிலும் கூட அதற்கு சற்றும் மதிப்பளிக்கக்கூடிய எண்ணத்தில் அதிமுக அரசு இல்லை என்பது தெளிவாகிறது. 

அதுமட்டுமல்ல, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று வலுவான குரல்கள் எழுந்துள்ள போதிலும், திமுக சார்பில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று முன்மொழிவு அளிக்கப்பட்டிருந்த போதிலும் அதை அதிமுக அரசு ஏற்கவில்லை. கடந்த சட்டமன்ற கூட்டத்தில் அதை நிறைவேற்ற மறுத்த அரசு, இந்த சட்டமன்ற கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றவில்லையென்றால் அடுத்து உடனடியாக சட்டமன்றம் கூடுவதற்கு வாய்ப்பு ஏதுமில்லை. இந்தக் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று உறுதியாக சொல்லும் விதத்தில் அதிமுக அரசிடமிருந்து எந்த அறிகுறியும் தென்படவில்லை. 

இதற்கு மாறாக, தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றால் எந்தப் பாதிப்பும் வராது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ஆனால் எப்படி பாதிப்பு வராது என்பதற்கு அவரிடம் பதில் இல்லை. எப்படிப்பட்ட பாதிப்புகள் எல்லாம் ஏற்படும் என்பதற்கு நமது கண்முன்னால் இருக்கிற உதாரணம்தான் அசாம் மாநிலம். அங்கே தற்சமயம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற முடியாமல் 19 லட்சம் மக்கள் துயரத்தின் பிடியில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமலாகும் போதுதான் பாதிப்பு எவ்வளவு கொடூரமானது என்பது இவர்களுக்கு புரியும். அமல்படுத்தியபிறகு ஏற்படுகிற பாதிப்பிலிருந்து இவர் எப்படி மக்களை பாதுகாப்பார் என்று சொல்ல தயாராக இருக்கிறாரா?

சென்சஸ் சட்டத்திற்கு விரோதமானது

அதேபோல இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் என்னவென்றால், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதற்கான கேள்விகளை, வழக்கமான மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) கேள்விகளோடு இணைத்து நடத்த இருக்கிறார்கள்; இது இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்திற்கே(சென்சஸ் சட்டம்) முற்றிலும் விரோதமானது. சென்சஸ் சட்டத்தின்படி, இத்துடன் சேர்த்து தேவையில்லாத வேறு எந்த விபரங்களையும் மக்களிடம் சேகரிக்கக்கூடாது. ஆனால் இப்போது, மக்கள் தொகை பதிவேட்டிற்கான (என்பிஆர்) 14 கேள்விகளையும் இத்துடன் சேர்த்துத்தான் கேட்கப் போகிறோம் என்று பகிரங்கமாக அறிவிக்கிறார்கள். அச்சட்டத்தின்படி, சென்சஸ் கணக்கெடுப்பு விபரங்களை யாருக்கும் பகிரவேண்டிய அவசியமில்லை என்பதும் இப்போது மீறப்படுகிறது. சென்சஸ் கணக்கெடுப்புடன் இணைத்து எடுக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான (என்பிஆர்) விபரங்கள், தானாகவே தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) தயாரிப்பதற்கான துறையின் வசம் செல்லவுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு என்று கேள்விகள் கேட்கப்படுவதே அடுத்து தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்குவதற்குத்தான். அதைத் தவிர இப்படி கேள்விகள் கேட்கப்படுவதற்கான வேறு எந்த தேவையும் இவர்களுக்கு இல்லை. 

மக்களை மோசடி  செய்கிற நயவஞ்சகம்

இதை சுட்டிக்காட்டி பேசும்போது, அரசுத் தரப்பிலும் இதை ஆதரிப்போர் தரப்பிலும், மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்குத்தான் இந்த விபரங்களை எடுக்கிறோம் என்கிறார்கள். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பதற்கும் சம்பந்தமே இல்லை. அப்படியானால், கடந்த 50 ஆண்டு காலத்திற்கு மேலாக எப்படி மக்கள் நலத்திட்டங்களை அமலாக்கினீர்கள் என்ற கேள்வி எழுகிறது. இத்தனை காலமும் மக்கள் தொகை பதிவேடு அல்லது குடிமக்கள் பதிவேடு உருவாக்கித்தான் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினீர்களா என்ற கேள்வி எழுகிறது. எனவே இது முழுக்க முழுக்க பாஜக - அதிமுக அரசாங்கங்களின் மோசடியே ஆகும். மக்களை ஏமாற்றுகிற ஒரு நயவஞ்சக திட்டமாகும். 

எனவே மக்கள் தொகை கணக்கெடுப்புடன் (சென்சஸ்) சேர்த்து தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கப்படுமானால், அது தானாகவே தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரிப்பதற்கான தரவுகளாக அமையும். அதன்படி தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) உருவாக்கப்படும் போது குடியுரிமை பறிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் பூதாகரமாக எழும். தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்கும் போது நம்மிடம் ஆவணங்கள் உள்ளதா? நமது பெற்றோரின் பிறப்பிடத்திற்கான சான்று ஆவணங்கள் உள்ளதா? என்பது உள்பட பல பிரச்சனைகள் எழும். உரிய சான்று ஆவணங்களை சமர்ப்பிக்காத அனைவரும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு குடியுரிமை பறிக்கப்படும். எனவே சென்சஸ் கணக்கெடுப்புடன் நடக்கவுள்ள மக்கள்தொகை பதிவேடு கேள்விகள் என்பவை, மக்களின் கழுத்தில் மாட்டப்படும் சுருக்குக் கயிறே ஆகும். 

நாளை கோட்டை  முன்பு போராட்டம்

எனவே தான் சென்சஸ் கணக்கெடுப்புடன் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான பணிகளை எந்தவிதத்திலும் இணைக்கக்கூடாது; அதை முற்றாக கைவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபட வலியுறுத்துகிறது. தமிழகத்தில் இதை அமலாக்காமல் இருக்க வேண்டுமானால் இதற்கு அடிப்படையாக உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலாக்க மாட்டோம் என்றும் என்பிஆர் மற்றும் என்ஆர்சி நடைமுறைகளை மேற்கொள்ள மாட்டோம் என்றும் தமிழக அரசு சட்டமன்றத்தில் அவசியம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். 

இதை அரசின் கவனத்தை ஈர்த்து வற்புறுத்தும் விதமாக, செப்டம்பர் 9 திங்களன்று சட்டமன்ற கூட்டம் தொடங்கும் நாளில் கோட்டை முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது. இந்த போராட்டத்திற்கு தமிழக மக்கள் பேராதரவு தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.


 





 

 

 

;